சாலிடேர் டிவி - ந. சுகந்தி

Solidaire TV

ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு, டிவி என்பது ரொம்ப ஆடம்பரம். டிவி இருக்கவங்களோடு பிரண்டா இருந்தா ஞாயிற்றுக்கிழமை சினிமாவ முதல் வரிசையில உக்காந்து மறைக்காம பாக்கலாம். எங்க ஹவுஸ்ஓனர் வீட்ல மட்டுந்தான் அப்ப  டிவி, அதுவும் கலர் டிவி! எப்பவாவது சாயங்காலம் நியூஸ் மட்டும் எங்க அம்மா போய் கேப்பாங்க ஏன்னா, அவங்க அந்த ஆன்டியோட பிரண்ட. முதல்ல சொன்ன ரூல்னால எங்க அம்மா எலிஜபல். அப்படியே, கூட இலவச இணைப்பா நான் தொத்திக்கிட்டே போவேன் நியூஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி  பத்து நிமிஷம், முடிஞ்சப்பறம் பத்து நிமிஷம் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாக்கறதுல ஒரு சந்தோஷம். எதுவும் புரியாது இருந்தாலும் பாக்கறது.

ஞாயிற்றுக்கிழமைகள்ல வர சினிமா மட்டும் ஒரு தெரு தள்ளி இருக்கற எங்க பாட்டி வீட்லதான். அதுக்கு, ஸ்நாக்ஸ் ஸ்பான்ஸர் எங்க அம்மா. பொதுவா வடை இல்ல பஜ்ஜி;  காபி ஸ்பான்ஸர் பாட்டி. எங்க வீட்லயே ஆடியன்ஸ் ஜாஸ்தி அதனால,  அவுட்ஸடைர்ஸுக்கு அனுமதி இல்ல. சினிமாவுக்கு நடுவுல வர்ற விளம்பரங்கள் ரொம்ப கம்மி. அதுலையும் அடிக்கடி தூர்தர்ஷனல வர்ற விளம்பரம், ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் போதிய இடைவெளி. புரியலனாலும் மனப்பாடமா ஒப்பிப்பேன். ஒரு தடவ அம்மாகிட்ட அர்த்தம் கேட்டப்ப நீங்க பக்கத்துல உக்கார வெச்சா சண்ட போடறீங்க அதுதான் தள்ளி இடம் விட்டு உக்காரனும்னு ஒரு விளககம். அதையும், நான் மக்கு மாதிரி கேட்டுக்கிட்டு  ரொம்ப வருஷம் அதுதான் அர்த்தம்னு நினைச்சட்டு இருந்தேன். இப்படியே  பல நாட்கள் ஓடிச்சு.

ஒரு நாள் எங்க வீட்ல டிவி வாங்கனும்னு முடிவு. அந்த எலக்ட்ரானிக்ஸ் கடைகாரன் ஏதேதோ புரியாத விஷயமா சொல்லி நாங்க வாங்கின டிவிதான் - சாலிடேர் டிவி. ஒரு சுபயோக தினத்துல எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்திச்சு. ஒரு மர பாக்ஸ்க்கு உள்ள டிவி. அந்த மர பாக்ஸ மூடி பூட்டி வெக்கலாம். எங்க அம்மாவோட ஐடியா! அவங்க இல்லாதப்ப நாங்க பாக்ககூடாதுன்னு இந்த ஏற்பாடு. ஆனா பத்து நாள்லயே பூட்டையும் உடைச்சு, சாவியையும் தொலைச்சது எங்க சாதனைகள்ல ஒன்னு. டிவி பிக்ஸ் பண்ண வந்தவன் மாடியில ஆன்டனாவ மாட்டிட்டு கீழ இருந்தவன்கிட்ட ‘வருதா? வருதா?,’ன்னு கேட்டு, ஒரு வழியா ஆன்டனாவ திருப்பி படத்த வர வெச்சிட்டான். எங்க டிவியில படம் தெரிய ஆரம்பிச்சது. அப்படி ஒரு சந்தோஷம். அன்னிலேயிருந்தது, எப்ப பார்த்தாலும் டிவிதான்! புரியுதோ புரியலையோ… இந்தி, இங்கிலீஷ் எல்லா மொழியும் பாக்கறது. அவ்ளோ ஏன் ஞாயிற்றுகிழமைகள்ல மூன்று மணிக்கு வர பெங்காலி படத்த கூட விடறது இல்ல.

திடீர்னு ஒரு நாள் டிவியில படம் வர்றல. எங்களுக்கு பைத்தியம் புடிச்சா மாதிரி இருந்தச்சு. அப்புறம் ஒரு வழியா ஒரு மெக்கானிக் வந்தாரு. அவரு வந்து ஆன்டனா ஒடஞ்சி இருந்தத கண்டுபிடிச்சாரு. யாரும் மொட்டை மாடி போக வழி இல்ல ஏன்னா நாங்க குடியிருந்த வீட்டோட மாடி உண்மையிலேயே  மொட்ட தான். அதுக்கு படிகளே கிடையாது ஏணி வெச்சுதான் ஏறனும். ஆன்டனாவ ஒடச்சது யாருன்னு ஒருவழியா கண்டு பிடிச்சோம். அது ஒரு காக்கா, தினமும் தன் காதலியோடு வந்து ஆன்டனாவுல உக்காந்து ஊஞ்சல் ஆடும். இத தடுக்க ரொம்ப தீவிரமா யோசிச்சோம். அப்ப, எங்க பாட்டி சொன்ன வடாம் ஐடியா கை கொடுத்துச்சு. அதாவது ஒரு கருப்பு துணிய ஆன்டனாவுல கட்டிட்டா காக்கா வராதுன்னு வடாம் வைக்கறப்ப செய்வோமே அந்த மாதிரி. இது ஓரளவுக்கு சரியா வந்தது.

எல்லாமே நல்லா போயிட்டு இருந்தது ரெண்டு வருஷதுக்கு. அப்புறம், ஒரு நாள் ஞாயிற்றுகிழமை சினிமா பாத்துட்டு இருந்தப்ப தீடீர்னு டிவியில புள்ளி புள்ளியா வந்துச்சு. அப்புறம் படம் அலை அலையா தெரிய ஆரமிச்சுது. ஆன்டனா ஒன்னும் பிரச்சனை இல்ல. பத்து நாள் கழிச்சு அப்பா மெக்கானிக் கூட்டிட்டு வந்தாரு. டிவி வேலை செஞ்சுது. அப்புறம், பதினஞ்சு நாள் கழிச்சு சேம் பிரச்சனை. மெக்கானிக்குகள் மாறி, மாறி வந்தாங்க. பிரச்சனை ஓஞ்ச பாடில்ல. எங்க வீட்டு டிவியில பழகி பெரிய மெக்கானிக் ஆனவங்க பல பேரு. பல நாள் அலை, அலையாவே சினிமா பார்த்திருக்கோம். அண்ணனுக்கு தான் டிவி மேல செம கோபம். ஒருநாள் ரஜினியோட நான் அடிமை இல்லை சினிமா பார்த்துட்டு இருந்தப்ப படம் சரியா தெரியாததால, வந்த கோவத்துக்கு ஜாமட்ரி பாக்ஸ் வெச்சு டிவி யோட மண்டையில் அதாவது, அந்த மர பாக்ஸ் மேல ஓங்கி ஒரு போடு போட்டான். என்ன ஆச்சரியம் டிவி நல்லா தெரிய ஆரம்பிச்சது. இந்த பிரச்சன வரும்போதெல்லாம் ஜாமட்ரி பாக்ஸ் டீரிட்மென்ட் தான். ஒரு சில நாளெல்லாம் அண்ணன் ஜாமட்ரி பாக்ஸை கையில எடுத்தவுடனே டிவி தெரிய ஆரபிக்கும். அவனுக்கு அதுல ஒரு பெருமை. எனக்கு கஷ்டமா இருந்தாலும் டிவி பாக்கனுமே அதனால வாயே தொறக்கறது இல்ல.

ஒரு நாள் அண்ணன் டிவி தலை மேல ஜாமட்ரி பாக்ஸ் டீரிட்மென்ட் கொடுத்துட்டு இருந்தான். அம்மா எவ்வளவு சொல்லியும் கேக்காம அடிசிட்டு இருந்தான். கடைசியா ஓங்கி ஒரு போடு போட்டான். டிவில இருந்த டமால்னு ஒரு சத்தம். அப்புறம் ஒரே புகை. டிவிய சுவிட்ச ஆஃப் பண்ணிட்டு, எங்க அம்மா செஞ்ச முதல் வேலை எங்க அண்ணன வெளாசுனது தான். டிவிக்கு விழுந்த அடிய விட அன்னிக்கு அவனுக்குதான் நல்ல அடி. தன்னோட இறுதி மூச்சு வர போராடிட்டு அந்த டிவி செத்து போாச்சு. அதோட பிக்சர் டியூப் போயிடுச்சு.

அதுக்கு அப்புறம் ஒரு மாசம் கழிச்சு ஒரு வீடியோகான் கலர் டிவி வாங்கனோம். வித் ரிமோட். சாலிடேர் டிவிய கழட்டிட்டு அந்த டிவிய வெச்சாங்க. எனக்கு அப்படி ஒரு கஷ்டம். ‘என்ன அனுப்ப போறியா’ன்னு சாலிடேர் டிவி கேக்ற மாதிரி இருந்துச்சு. வீட்ல எல்லோரும் ரிமோட் பத்தி கேட்டுட்டு இருந்தப்ப நான் அந்த சாலிடேர் டிவியோட சைடுல காம்பஸ் வெச்சு என் பேரை செதுக்கிட்டேன். நான் அடிமை இல்லை சினிமால ரஜினி செஞ்ச மாதிரி. என்னிக்காவது அந்த டிவிய மறுபடியும் பார்ப்போம்னு நம்பிக்கையில.

எங்க வீட்ல பல டிவிக்கள் மாறியாச்சு. சமீபத்தில வந்த சாம்சங் ஐ சென்ஸிங் எல் இ டி வரைக்கும். எப்பவும் என் மனசுல நிக்கறது அந்த சாலிடேர் டிவி மட்டுந்தான். அது வாங்கன அடியும் கூட மறக்க முடியாது.

நிழற்படம்: யூட்யூப்பில் இருந்து. புது புது அர்த்தங்கள் படத்தின் ஓர் காட்சி.