(இக்ககதையின் ஒலிப்புத்தக வடிவத்தை இங்கு கேட்க்கலாம்)
என் கண்ணிலிருந்து தாரைதாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுப்பது காதில் விழுந்தது ,”யாரென்று அடையாளம் தெரியவில்லை, வந்ததிலிருந்தே கண்ல தண்ணி. மோகனுக்கு தெரிந்தவராயிருக்கும்”. அவர்களுக்கு தெரியாது இன்று மாலை 5 மணிக்குதான் இவரை நான் முதல்முறையாக பார்த்தேனென்று. நான் பார்த்த அரை மணி நேரத்தில் அவர் ‘அது’வாகி விட்டார்.
அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் அவருடனான (அப்போது அவர் பெயர் மோகன் என்று எனக்கு தெரியாது) என் சந்திப்பு துல்லியமாக மனத்திரையில் ஓடியது.
நான் நுங்கம்பாக்கம் ரயிலடியில் ஒரு மூலையாக நின்று புகைப்பிடித்து கொண்டிருந்தேன். அப்போதுதான் இவர் என் அருகே வந்து ‘நெருப்பு கிடைக்குமா’வென கேட்டார். மிக எளிதாக இருவர் நெருக்கமாகும் ஒரு வழி,தேவையும் செலவின்றி பகிர்தலும். நெருப்போடு சிகரெட்டை
நீட்டினேன். பற்றவைக்கும்போதுதான் கவனித்தேன் அவருடைய கைகள் நடுங்குவதை. எனக்கும் யாரிடமாவது பேசினால் நன்றாயிருக்கும் போலிருந்தது. பெயர் மோகன் என்றும் அண்ணாநகரில் வசிப்பதாகவும் சொன்னார். சற்று பேசி கொண்டிருக்கும் போதுதான் கவனித்தேன் அவர் மிகவும் பதட்டமாக இருந்ததை. பத்து நிமிட பேச்சுக்குள் கையிலிருந்த பாட்டில் தண்ணியை மூன்றுமுறை குடித்துவிட்டார். பாவம் மனுஷனுக்கு ஏதோ பிரச்சனை. நமக்கே தலைக்குமேல் போய் கொண்டிருக்கிறது, வந்த வேலையை கவனிப்போம் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
பத்து நிமிடங்கள் இலக்கில்லாமல் பிளாட்பாரத்தில் அலைந்துவிட்டு இறங்கி தண்டவாளங்களையொட்டி கோடம்பாக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போதுதான் எனக்கு முன்னே கொஞ்ச தூரத்தில் சற்றுமுன் சந்தித்த மோகன் நடந்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே இடைவெளி விட்டு நாங்களிருவரும் நடந்து கொண்டிருந்தோம் எதிர்திசையில் ரயிலொன்று வரும்வரையில். ரயில் வேகமாக அருகில் நெருங்கியதும், மோகன் அதன் முன்னே பாய்ந்ததும், ‘மடேல்’ என்ற சத்தத்துடன் தூக்கிவீசப்பட்டதும் எதிர்பாராமல் நொடியில் நடந்து முடிந்து விட்டது. சற்றுமுன் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் பலத்த காயத்துடன் தூக்கிவீசப்பட்டதின் முழு தாக்கத்தையும் உள்வாங்குமுன் அனிச்சையாக சத்தம் போட்டுக்கொண்டே அவரை நோக்கி ஓடினேன். அருகில் சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் ஒரு சதை குவியலாக அவரை பார்த்தேன். அதற்குள் மள-மளவென்று கூட்டம் சேர்ந்து ஜாக்கிரதையாக தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
சிலர் மோகனை புரட்டிப்பார்த்து விட்டு ‘ஒண்ணுமில்லை’ என உதட்டை பிதுக்கினார்கள். யாரோ ஒருவர் அவசர உதவிக்கு போன் செய்ய, சற்று நேரம் கழித்து ஆம்புலன்சு வர, அதற்கு பிறகு போலிசும் வந்தார்கள். அவர்கள் பிணத்தின் சட்டைப்பையிலிருந்து அடையாள அட்டையை எடுத்து மோகனின் வீட்டிற்கு தகவல் சொன்னார்கள். போலீஸ் வழக்கமான விசாரணைக்கு பிறகு என்னையும் பிணத்துடன் ஏற்றிக்கொண்டு ஜிஹெச்சுக்கு போனார்கள்.
ஜீஹெச்சில் அவசர சிகிச்சை பிரிவில் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது நான் மட்டும் கொஞ்சநேரம் ‘அதோடு’ இருக்கவேண்டிவந்தது. தனியாக குலுங்கிகுலுங்கி அழுதேன். திரும்பி வந்தபோது அழுது கொண்டிருந்த என்னைப்பார்த்த காவலர்கள் ‘பாவம், இளகிய மனசு போல’ என உச் கொட்டினார்கள். இன்னும் கொஞ்சநேரம் கழித்து டாக்டர் அங்க அடையாளம் பார்த்து பதிவேடுகளில் பதிந்து கொண்டிருந்த போதுதான் நான்கைந்து பேர் பதட்டத்துடன் ஓடிவந்து மோகன் பற்றி விசாரித்தார்கள். விபரம் தெரிந்தவுடன் வந்தவர்களில் ஒருவர் ‘மாமா’ என்று அலறிக் கொண்டு பிணத்தை நோக்கி பாய்ந்தார். பாய்ந்தவர் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பெருங்குரலெடுத்து தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை பிணத்திடமிருந்து பிரித்தெடுத்து சமாதானப்படுத்தி வெளியில் கொண்டு விட்டார்கள். டாக்டர் நடைமுறைகளை முடித்து ‘பாடி’யை பிணவறைக்கு அனுப்பினார். அப்புறமும் சுமார் ஒருமணி நேரம் கழித்துதான் ஆஸ்பத்திரியின் இன்னொரு கோடியில் உள்ள பிணவறைக்கு மோகனை நகர்த்த முடிந்தது. இதற்கிடையில் மருத்தவமனை ஊழியர்கள் மோகனின் உறவினர்களிடம் பிணவறையில் ஏற்கெனவே ஐம்பத்திரண்டு பிணங்கள் இருப்பதாகவும் ஏ.சி குறைவாக இருப்பதாகவும், ‘கொஞ்சம்’ கவனித்தால் நல்ல இடம் ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் வாங்கி கொண்டார்கள். ஒரு வழியாக இந்த வேலை முடிந்தவுடன் போலீசார் மறுநாள் காலை போஸ்ட்மார்டம் சீக்கிரம் நடக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி கொஞ்சம் பணம் வாங்கிகொண்டு கிளம்பினார்கள்.
மோகனின் உறவினர்களில் மைத்துனரை தவிர மற்றவர்கள் எங்கோ சென்றார்கள். அவர்கள் திரும்பும் வரை நானும் அவரும் தனித்து விடப்பட்ட போது என்னை பற்றி வினவியதற்கு மோகனின் நண்பன் என்று மட்டும் கூறி வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் மோகன் வீட்டுக்கு சென்று காலையில் திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. நானும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டேன். அண்ணாநகரிலுள்ள மோகனின் வீட்டிற்கு அருகில் செல்லசெல்ல மைத்துனரின் அழுகை அதிகமாயிற்று. வீட்டில் நுழையும் முன்னரே மோகனின் மனைவி ஓடோடி வந்து தம்பியின் கழுத்தை கட்டிக்கொண்டு கதறோ கதறென்று கதறினார். அப்பொழுதுதான் வீட்டில் நிறைய உறவினர்கள் இருந்ததையும் அவர்களில் பலர் அழுது கொண்டிருந்ததையும் கண்டேன். மோகனுக்கு ஒரே மகனென்றும் அவர் சிங்கப்பூரில் வேலையில் இருப்பதாகவும் அறிந்தேன். மோகனின் வயதான பார்வை குறைந்த தாய் அழுததை பார்க்க பரிதாபமாயிருந்தது. அந்த அம்மா அழுததை பார்க்கும்போது என் தாயின் நினைவு வந்து என்னாலும் அழுகையை அடக்க முடியாமல் நான் அழுது கொண்டே சற்று நகர்ந்தேன். கால் போன போக்கில் நடுநிசிவரை நடந்து விட்டு மோகனின் வீட்டுக்கே திரும்பினேன். கூட்டம் அதிகரித்திருந்தது. அப்போதுதான் நான் ஆரம்பத்தில் கூறிய என்னைப்பற்றிய அடையாள வினவல் நடந்தது.
இரவு முழுதும் அவ்வப்போது உறவினர்களும் நண்பர்களும் மோகனின் ஊரிலிருந்து வந்தனர். நெருங்கியவர்கள் வந்த நேரங்களில் அழுகை சத்தம் அதிகமாயிற்று. மோகன் மனைவியின் உறவினர்கள் அவரை கட்டிபிடித்து பலவாறு புலம்பியபடி அழுதார்கள். அவரும் திரும்ப திரும்ப “நோயில போயிருந்தாலும் பரவாயில்லையே, மனசு ஆறிடுமே! காலத்துக்கும் எனக்கு பழி உண்டாக்கிட்டு போயிட்டாரே!” என்று புலம்பியபடி இருந்தார். எனக்கும் அவருடைய கவலை நியாயமாக பட்டது. கணவன் தற்கொலை செய்து கொண்டால் மனைவி காரணமாயிருக்கலாமோ என சமூகம் சந்தேக படுகிறதே! அந்த அம்மாளை பார்த்தால் மிகவும் நல்லவராக தெரிகிறார். வருபவர்கள் யாரும் அவரை குற்றம் சொல்லவில்லை. இருந்தாலும், இவர் மீதமுள்ள வாழ்நாளை இந்த குற்ற உணர்வோடுதான் கழிக்க வேண்டி வருமோ? மோகன் தற்கொலை முடிவுக்கு வந்தபோது மனைவிகுறித்தும் யோசித்திருக்க வேண்டுமோ? புத்திரசோகத்தில் தள்ளாத வயதில் கதறிகொண்டிருக்கும் தாயையும் பற்று கோல் இழந்த கொடிபோல் பரிதவிக்கும் மனைவியையும் காலையில் வரப்போகும் மகனையும் கணக்கில் கொண்டால், இறந்தது மோகன் மட்டுமல்ல இவர்களின் மகிழ்ச்சியும் தான் என்றே தோன்றுகிறது. ஒரு நிலைக்கு மேல் மனிதன் குடும்பம் என்ற அலகின் ஒரு அங்கம்தானே. ஒரு அங்கம் குறைந்தாலும் அது ஊனம்தானே! முதிர்ந்து விழும் தென்னைமட்டைக்கும் வெட்டியெடுக்கப்பட்ட குருத்தோலைக்கும் வித்தியாசம் உண்டல்லவா? இந்த எண்ணங்களெல்லாம் என் மனதில் ‘இழவு’ வீட்டிலும் ஓடிகொண்டிருந்தது.
காலை எட்டு மணிக்கு மோகனின் மகன் வந்து சேர்ந்தான். இருபத்தைந்து, மதிக்கத்தக்க வசீகரமானவன், சிங்கப்பூரில் நல்ல வேலையாம். பையன் விழுந்து புரண்டு கதறி அழுததை பார்த்து மொத்தக்கூட்டமும் ஒருமுறை குலுங்கியது.
காலையில் பத்துமணிக்கு ஜீஹெச்க்கு சென்றோம். ஒரு வழியாக போஸ்ட்மார்டம் முடிந்து வீட்டுக்கு ‘பாடி’யை கொண்டுசேர்க்க நான்கு மணியாயிற்று. சுருக்கமாக சொல்வதானால் ஒரு முறை போஸ்ட்மார்ட்டத்திற்கு அலைந்த ஒருவன் தற்கொலைக்கு துனிய மாட்டான். ‘பாடி’வீட்டுக்கு வந்தவுடன் மோகனின் மனைவி, மகன், தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கதறின கதறல் எந்த கல்நெஞ்சையும் கரைத்துவிடும். ஒரு அகால மரணம் சுற்றத்தையும் நட்பையும் எப்படி பாதிக்கிறது என்பதை நான் மோகன் மரணத்தில் கண்டேன்.
பிணத்தை சடங்குகள் முடித்து இறுதி பயணத்திற்கு வண்டியேற்ற தூக்கவேண்டி வந்தபோது நானும் ஒருவனாக தோள் கொடுத்தேன்.
இடுகாடு அதற்கேயுரிய காலம்காலமாக போதிக்கப்பட்ட ஒரு இனம்புரியாத பயமுறுத்தலோடு காத்திருந்தது. வெட்டியானின் வழக்கமான சடங்குகளுக்கு பிறகு
“ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே,
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே,
வாய்த்த குயவனார் அவர் பண்ணும்பாண்டம்,
வரையோட்டுக்கும் ஆகாதென்று…” பாடினார். அந்த அமானுஷ்யமான சூழ்நிலையில் சேகண்டி, சங்கு பின்னிசையுடன் ஆழமான குரலில் அவர் பாடியது மனதை பிசைந்தது. கட்டைகளை அடுக்கி பிணத்தின் முகத்தை வறட்டியால் மூடுமுன் வெட்டியான் உறவினர்களை அழைத்து கடைசியாக ‘முகம்’ பார்க்குமாறு கூறினார். நான் என்னையும் அறியாமல் விசும்பியபடி இருந்தேன். மோகனின் மகன் சிதையை நீர் பானையுடன் மூன்றுமுறை வலம் வந்து தீ மூட்டினார். வெட்டியான் அனைவரையும் திரும்பி பார்க்காமல் செல்லுமாறு கூறினார்.
நேற்று வரை அறியாமல் இருந்து, நான் தற்கொலை செய்வதற்காக ரயில் முன் பாய நினைத்திருந்தபோது என்னை சற்று முந்தி கொண்டு, உயிரை விட்டு ஒரு தற்கொலையின் வலி, சுற்றத்தின் இழப்பு, அதன் தாக்கம் அனைத்தையும் கண் முன்னே காட்டி, என்னை சாவிலிருந்து மீட்டு வாழ வைத்த தெய்வத்தை நினைத்துக் கொண்டு கண்ணில் நீருடன் திரும்பி பாராமல் வாழ்வை நோக்கி நடந்தேன்.
டாக்டர் செ அசோகன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் (gastrointestinal surgeon) ஆவார். தற்போது வேலம்மாள் மருத்துவ கல்லூரி, மதுரையின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
Cover photo: vintagefieldandgarden.com