மீண்டும் பொறக்காத

- ந. சுகந்தி 

Photo Credit: https://www.flickr.com/photos/michale

(இக்கவிதையின் ஒலிப்புத்தக வடிவத்தை இங்கு கேட்கலாம்.)

மகளே,

பாதகத்தி என் வயித்துல

ஏன் வந்து நீ பொறந்த?

பாவிப்பய உலகத்துல

மீண்டும் வந்து பொறக்காதே.

தோட்டாக்க உன் உடம்ப

தொலைச்சப்ப,

அம்மா னு கதறியிருப்ப

அள்ளி உன அணைச்சிக்கல,

என் நெஞ்சுல வாங்கிக்கல.

பாதகத்தி என் வயித்துல

ஏன் வந்து நீ பொறந்த ?

நீ நட்டு வச்ச செடி கூட பூக்கல,

உன் நாயக்குட்டி இன்னும் உறங்கல,

சுவத்துல நீ எழுதுன படங்கூட அழியல,

    அம்மான்னு நீ கூப்பிட்ட சத்தம் கூட அடங்கல,

பாதகத்தி என் வயித்துல

ஏன் வந்து நீ பொறந்த ?

போர் எப்படி புனிதமாகும்?

பிஞ்சு உசுர சாமி எப்படி பலி கேக்கும்?

உன்ன சுட்டவனுக்கும் குழந்த இருக்கும்,

அவளாவது நல்லா இருக்கட்டும்.

பாதகத்தி என் வயித்துல

ஏன் வந்து நீ பொறந்த ?

ஒவ்வொரு நாளும் இங்க செத்துட்டு

உன் கூட நான் வாழ வரேன்.

மகளே,

பாதகத்தி என் வயித்துல

ஏன் வந்து நீ பொறந்த?

பாவிப்பய உலகத்துல,

மீண்டும் வந்து பொறக்காத,

மீண்டும் வந்து பொறக்காத.

முன்பு தொடர்பியல் துறையில் விரிவுரையாளர் தற்போது இரண்டு அழகான குழந்தைகளுக்கு தன் நேரம் முழுவதும் தேவைப்படுவதால் ஆசிரியர் வேலைக்கு விடுப்பு அளித்துள்ளார் ந. சுகந்தி.